SAINT FRANCIS XAVIER CHURCH

Tuesday 17 March 2015

நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே

நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே
நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பைப் பாடியே (2)
கோடி நன்றி பாட்டு பாடுவேன்
காலமெல்லாம் வாழ்த்துக் கூறுவேன் (2)

உயிர்கள் யாவும் வாழ நல் உலகைப் படைத்ததால்
உறவு வாழ்வு வளர நல் உள்ளம் உறைந்ததால்
நிஜங்கள் யாவும் நிலைக்க நற்செய்தி தந்ததால்
நிழல்கள் துன்பம் மறைய திருவிருந்தை அளித்ததால்
பகிர்ந்து வாழ்வில் வளர நல்மனதைக் கொடுத்ததால்
பரமன் அன்பில் வாழ அருள் வளங்கள் பொழிந்ததால் (2)

பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னைச் சேர்த்ததால்
ஜெபித்து நின்று வேண்டும்போது என்னைக் காப்பதால்
நேசக் கரத்தை நீட்டி வந்து நன்மை செய்வதால்
துன்ப துயரைப் பனியைப்போல விலக வைப்பதால்
உண்மை அன்பில் உள்ளம் மகிழத் தந்ததால்
உந்தன் ஒளியே உலகில் எந்தன் வழியாய் ஆனதால் (2)

ஆவலுடன் நான் ஆண்டவர்க்காக

ஆவலுடன் நான் ஆண்டவர்க்காக காத்திருந்தேன்
அவரும் என்னைக் கனிவாக கண்ணோக்கினார் (2)

என் குரலுக்கு அவர் செவி கொடுத்தார்
எழுந்திட எனக்கவர் கை கொடுத்தார்
பாறையில் கால்களை ஊன்றச் செய்தார்
பாதையில் துணை வரும் காவலானார்

நாளும் இறை புகழ் இசைத்திடவே
நாவில் வைத்தார் புதுப்பாடல்
கண்டு கலங்கிய அனைவருமே
கடவுளை நம்பி மகிழ்வுற்றார்

உம்மைத் தேடும் அனைவரையும்
அன்பில் வேரூற்றி நிற்கச் செய்யும்
விடுதலை வழங்கும் துணை நீரே
விரைவாய் இறைவா வருவீரே 

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே

இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் (2)
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதிலோர் ஆகமம் (2)
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே (2)

இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் (2)
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே (2)
தந்தேன் என்னை தந்தேன் என்றும் என்வாழ்வு உன்னோடுதான் (2)

தினந்தோறும் தினந்தோறும் உன்னை நானும் தேடி

தினந்தோறும் தினந்தோறும் உன்னை நானும் தேடி
வருவேன் உன் சந்நிதி - என்றும் நீதான் வாழ்வின் கதி
இப்போதும் எப்போதும் கவி நூறு பாடி
தொழுவேன் உன் சந்நிதி - என்றும் நீதான் வாழ்வின் கதி
ஒரு பார்வை போதும் ஒரு வார்த்தை போதும்
ஒரு தீண்டல் அது போதுமே - என்றும்
என் வாழ்வே உனதாகுமே

வழியெங்கே எனத்தேடி விழி ஏங்கும் போது
நான் தேடும் வழியாகும் உன் சந்நிதி (2)
வரும்கோடி உனைநாடி மனம் தேடும்போது
நான் காணும் கதியாகும் உன் சந்நிதி
நதி கூடும் கடலாக விழிமூடும் இமையாக
கவி பாடும் குயிலாக கனியூட்டும் சுவையாக
வந்த என் சொந்தமே வாழும் உன் பந்தமே - ஒரு பார்வை

சோகங்கள் சுமையாகி நான் வாடும் போது
சுமை தாங்கும் கரமாகும் உன் சந்நிதி (2)
சொந்தங்கள் இனி எங்கே என ஏங்கும்போது
உறவாக எனைச் சேரும் உன் சந்நிதி
பயிர் மூடும் பனியாக உயிர் கூடும் உறவாக
மழை தேடும் நிலமாக மனம் தேடும் மொழியாக
வந்த என் சொந்தமே வாழும் உன் பந்தமே - ஒரு பார்வை

Sunday 15 March 2015

கண்ணில் புதிய வானம்

கண்ணில் புதிய வானம் கையில் புதிய பூமி
செல்வோம் புதிய பாதை இயேசு அழைக்கின்றார் (2)

நீதி மறையும் போது அமைதி இல்லையே (2)
நீங்காப் பகையினாலே வாழ்வில் தொல்லையே
இணைவோம் பகை மறப்போம் இறைவன் உறவிலே (2)

கவலை இனியும் இல்லை காப்பார் இறைவனே
அவரின் அன்பின் அரசில் அனைத்தும் இனிமையே
இணைவோம் அன்பைப் பகிர்வோம் இறைவன் உறவிலே (2)

உறவு மலரும் புனித இடம்

உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம்
உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம் (2)
உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட
உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம்
ஆலயம் ஆலயம் ஆலயம் ஆலயம்

இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம்
பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் ஆலயம்
மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள்
மானுடர் வாழ்வுக்காய் தனைத் தரும் நெஞ்சங்கள்
நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள்
உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள்
எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம் (2)

பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் ஆலயம்
காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் ஆலயம்
விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும்
கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும்
நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள்
நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள்
எல்லாமே இறைவன் உறையும் ஆலயம் (2)

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே

நல்லகாலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு
புனிதர் கோயில் தொறந்திருச்சு நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே - உங்க
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே (2)
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே - உமக்கு
கோயில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே (2)

இயேசு சாமி வார்த்தைகள பேசி வந்த போதகரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே (2)
இறைவன் தந்த அருள் கொடையே சவேரியாரே (2)
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே (2)

தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே
நற்செய்தி போதித்த சவேரியாரே
நற்செய்தி போதித்த சவேரியாரே
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் (2)
ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே (2)
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே (2)

கட்டுமர ஓடத்திலே கடல்மீது போகையிலே
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே
அலையோடு போராடி வலை வீசும் வேளையிலே (2)
நல்லாசி தந்திடுமே சவேரியாரே (2)
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே (2)

உலகமெல்லாம் எனக்காதாயம்

உலகமெல்லாம் எனக்காதாயம் என வாழ்ந்தவர் மகிழ்ந்ததில்லை
ஆன்மாவே எனக்காதாயம் என வாழ்ந்தால் கவலையில்லை (2)
அழியும் செல்வம் சேர்ப்பதா அழியா ஆன்மாவைக் காப்பதா (2)
இந்தக் கேள்விக்குப் பதிலாய் வாழ்ந்தவர் யார்
அவரே புனித சவேரியார்

பொன்னும் பொருளும் தேடுகிறோம்
பட்டம் பதவியை நாடுகிறோம் (2)
எதுவும் நிறைவு தருவதில்லை
எதிலும் மகிழ்ச்சி நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான் (2)

அறிவும் திறனும் அமைவதில்லை
உறவும் நட்பும் தொடர்வதில்லை (2)
தேடும் எதுவும் கிடைப்பதில்லை
கிடைக்கும் பலவும் நிலைப்பதில்லை
முடிவில்லாதது ஒன்றேதான்
அழிவில்லாத ஆன்மாதான் (2)

இயேசுவே என் தெய்வமே

இயேசுவே என் தெய்வமே - என்
நெஞ்சிலே வந்து தங்குவாய் (2)
எந்தன் உள்ளம் நிறைந்து என்றும்
எனது வழியைக் காட்டுவாய்

கல்லும் முள்ளும் நிறைந்த எனது
வாழ்வின் தடைகள் ஆயிரம்
செல்லும் வழியில் துணையாய் வந்தால்
எந்த இடரும் போய்விடும்
அச்சமின்றி பயணம் தொடர
அன்பில் நாளும் உன்னில் வளர
நீ என் துணை வருவாய்

உனது உடலும் குருதியும் என்
ஜீவ உணவாய் மாறட்டும்
உந்தன் தியாகம் உண்மை அன்பும்
எந்தன் வாழ்வில் நிகழட்டும்
எனது நெஞ்சில் வந்த இறைவா
உனது பாதை நாளும் நடந்து
என்றும் பின் தொடர்வேன்.

கருணை உன் வடிவல்லவா

கருணை உன் வடிவல்லவா
கடவுள் உன் பெயரல்லவா
கடந்தாலும் உள்ளத்தின் உள் வாழ்பவா
கருணை உன் வடிவல்லவா
வானம் பறந்தாலும் அங்கும் உன் மேன்மை தங்கும்
கடலாழம் சென்றாலும் உன் ஞானம் பொங்கும்
எங்கெங்கும் தெய்வீக மயமல்லவா

வெளி எங்கும் சுடர் வீசும் ஒளி என்று சொல்வார்
மனதீபம் நீ என்று அறியாமலே
அருள் மேகம் பொழிகின்ற மழை என்றும் சொல்வார்
அகம் ஊறும் உந்தன்பைப் புரியாமலே (2)
தொடுந்தூரம் இருந்தாலும் நீதான் என்றேன்
உணராத நிலை மாற்றுவாயோ
உந்தன் கடல் போன்ற அன்பின் துளி போதும் வாழ்வேன்
ஒளி உண்டு வாழும் மலர் போல ஆவேன்
மனவாசல் திறந்தே உன் மயமாகுவேன்

செவியின்றிக் குயில்பாடல் இனிதென்று சொன்னால்
புவிமீது இசை ஞானம் இழிவாகுமே
சுயம் தேடி அலைவோர்கள் அன்பென்று உன்னைப்
புகழ்ந்தாலும் உன்மேன்மை பழுதாகுமே (2)
உன் வான விண்மீனில் ஒன்றாய் என்னை
உண்டாக்கி அருள் வீசுவாயோ
தூய்மை உலைமீது ஒளிரும் இரும்பாகக் காய்வேன்
இறைமீட்டும் யாழில் நரம்பாகத் தேய்வேன்
நிலை என்ன வந்தாலும் உனைப் போற்றுவேன்

புதுமை தேடுகின்ற இதயங்களே

புதுமை தேடுகின்ற இதயங்களே
புது பலியினில் கலந்திட வாருங்களே (2)
புவியில் ஆண்டவர் இருக்கின்றார் - அவர்
புனித இதயங்களில் பிறக்கின்றார் (2)
எழுக எழுக இறைகுலமே - இங்கு
இறைவனின் ஆசி அடைந்திடவே (2)

இடர்படும் இறைவனின் ஊழியரே - நம்
இறைவனின் பணியினை ஏற்றிடவே (2)
இகமதில் இனிதே அழைக்கின்றார் (2)
தலைவன் தங்க தலைவன் இயேசுவின் வழியினில்
இந்தத் தரணியை நாளும் வழிநடத்திடவே பணிக்கின்றார்.

ஏழைகள் வாழ்வை உயர்த்திடவே - எங்கும்
எளியோர்க்கு நற்செய்தி உரைத்திடவே (2)
அருள் தரும் ஆண்டினை அறிவிக்கவே (2)
உதயம் தேடும் இதயங்களெல்லாம் உண்மை விடுதலை
அடைந்திடும் நிலையை உன் வழியே அவர் காண்கின்றார்.
 

Blogger news

Blogroll

About