SAINT FRANCIS XAVIER CHURCH

Friday, 8 November 2013

ஆலயக் கொடி மரம் (The Holy Flag Pole)


கி.பி.1945 ஆம் ஆண்டு ஆலயத்திற்கு முன்புறமுள்ள கொடிமரமானது நிறுவப்பட்டது. இது கடைவிளாகம் (தற்போதைய குறும்பனை ஆலயத்திற்கு அருகில் உள்ள பகுதி) என்னுமிடத்தில் வசித்து வந்த சலவை தொழில் செய்யும் ஒரு தாயாரால் தூய சவேரியாருக்கு நேர்ச்சையாக வழங்கப்பட்டதாகும்.

இக்கொடிமரம் மிகவும் நேர்த்தியாக கல்குறிச்சியில் செய்யப்பட்டு, நான்கு காளை வண்டிகளை ஒன்றாக சேர்த்துக் கட்டி அதன்மீது ஏற்றப்பட்டு மக்களால் இழுத்துவரப்பட்டது. சரியான சாலை வசதிகள் இல்லாத நிலையில் மேடு பள்ளமான வழித்தடங்களில் மக்களின் எழுச்சிமிகு கூட்டு முயற்சியில் கொண்டு வரப்பட்டது. வழியில் பனவிளை அருகே வரும்போது பனவிளை ஏற்றத்தில் இழுத்து வர முடியாமல் நின்றது. உடனே அங்கிருந்து எமது ஊருக்கு உடனே தகவல் வர, காத்திருந்த மக்களும், குறும்பனை, மிடாலம் பகுதிகளைச் சார்ந்த தூய சவேரியாரின் பக்த்தர்களும் வேகமாகச் சென்று அன்பரின் கொடிமரத்தினை ஆலஞ்சிக்கு கொண்டு வந்தனர்.
 
இவ்வாறு கொண்டுவரப்பட்ட கொடிக்கம்பமானது பட்டை வடிவில் செதுக்கப்பட்டது. செதுக்கும் போது மூன்று அடி அளவில் தனியாக உடைந்தது. உடைந்த பாகத்தைத் தவிர மீதமுள்ள கல் கொடிமரமாக வடிவமைக்கப்பட்டது. உடைந்த பாகமானது ஆட்டுரல் வடிவில் செதுக்கப்பட்டு கொடி மரக்கல்லுக்கு அடித்தளமானது. இந்த கொடிமரம் நிலை நிறுத்தப்பட்டபோது இரண்டு பனைமரங்கள் தாங்கியாக X வடிவில் பயன்படுத்தப்பட்டன. கொடிக்கம்பமானது மேலே தூக்கப்பட்டபோது, அதற்காக பயன்படுத்தப்பட்ட முக்கிய வடம் அறுந்தது. இதனால் பனைமரத்தாங்கிகளில் கொடிமரம் நிலைநிறுத்தப்பட்டது.

மறுநாள் குளச்சல் துறைமுகத்திலிருந்து வடம் மற்றும் பெரிய கப்பிகளைக் கொண்டு வந்து அவற்றை சரியாகப் பயன்படுத்தி மக்களின் முழுமுயற்சியோடு தற்போது இருப்பது போன்று கொடிமரம் நிலை நிறுத்தப்பட்டது. அன்று கொடிமரம் கொண்டு வந்த பாதையானது பிற்காலத்தில் சாலையாக உருவானது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment

 

Blogger news

Blogroll

About