அன்புக்குரியவர்களே.....
இங்கே பதிவிடப்போகும் நிகழ்ச்சி ஒரு உண்மை சம்பவம். தூய ஆரோக்கிய அன்னையின் கருணைக்கு ஒரு உண்மையான சாட்சி.
இங்கே பதிவிடப்போகும் நிகழ்ச்சி ஒரு உண்மை சம்பவம். தூய ஆரோக்கிய அன்னையின் கருணைக்கு ஒரு உண்மையான சாட்சி.
கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் என்னும் ஊரைச் சார்ந்த நண்பர் ஒருவர் அழகிய மண்டபம் என்னும் ஊரைச் சார்ந்த ஒரு பெண்ணை நேசித்து திருமணம் செய்ய முடிவு செய்திருந்தார். இன்னும் ஒரு வருடத்திற்குள் திருமணம் செய்ய முடிவு செய்திருந்தனர். இந்த நிலையில் அந்த பெண் உடல் நலமின்றி நோய்வாய்ப்பட்டார். மட்டுமல்லாமல் அவர் வாய் பேசும் தன்மையையும் இழந்தார். கடந்த 18 நாட்களாக அவர் வாய் பேச இயலாமல் இருந்தார். பல மருத்துவமனைகளிலும், திருவனந்தபுரத்தில் உள்ள பிரபல மருத்துவ மனையிலும் கைவிடப்பட்ட நிலையில் அவர் வீட்டிற்கு திருப்பி அனுப்பப்பட்டார்.
இந்த துன்பத்தை அந்த மாத்தூரைச் சார்ந்த நண்பர் ஆலஞ்சி ஊரைச் சார்ந்த நண்பர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டார். அவரது வேதனையை புரிந்து கொண்ட நண்பர் ஆலஞ்சி மாதா நகரில் உள்ள குருசடியில் வீற்றிருக்கும் தூய ஆரோக்கிய அன்னையை மனதில் நினைத்து அந்த பெண் உடல் நலம் பெறவும், அவருடைய வாய் பேசும் திறன் திரும்ப வரவும் மனமுருகி வேண்டிக்கொண்டார்.
நேற்று இரவு சுமார் 2.00 மணியளவில் அந்த பெண்ணுக்கு நோய் அதிகமாகி மிகவும் துன்பப்பட்டார். உடனே வீட்டில் உள்ளவர்கள் அவரை வேலூரில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தீர்மானித்து காரில் கிளம்பினார்கள். மதுரையை தாண்டி 16 கிலோ மீட்டர் தூரம் சென்றதும், திடீரென்று கார் பழுதாகி நின்றது. ஓட்டுனர் முடிந்தவரை முயன்றும் வண்டியை ஸ்டார்ட் செய்ய முடியவில்லை.
உடனே ஓட்டுனர் அவர்களை அங்கேயே இருக்க சொல்லிவிட்டு பக்கத்தில் ஒர்க் ஷாப் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க சென்றார். இவர்கள் காரிலிருந்து கீழே இறங்கினார்கள். அங்கே தூய ஆரோக்கிய அன்னையின் ஒரு குருசடி இருந்தது. இவர்கள் அந்த பெண்ணையும் அழைத்துச் சென்று அந்த குருசடியில் அமர்ந்து மாதாவை நினைத்து ஜெபித்தார்கள்.
சிறிது நேரத்தில் அந்த பெண் வாயில் ஏதோ ஒரு சிறு குழந்தை தட்டியதைப் போல உணர்ந்தார். உடனே அவர் திடுக்கிட்டு அலறிக்கொண்டு எழுந்தார். என்ன விந்தை பாருங்கள்! அவர் எழுந்தவுடன் அவருக்கு பேச்சு வந்தது. உடலில் உள்ள நோய்கள் எல்லாம் குணமாகி ஒரு புதிய தெம்பு வந்ததை உணர்ந்தார். அவருடைய குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்து கண்ணீரோடு மாதாவுக்கு நன்றி செலுத்தினர்.
பின்னர் அவர்கள் வேலூருக்கு செல்ல வேண்டாம் என்று முடிவெடுத்து திரும்ப வீட்டிற்கே வந்தனர். இது மாதாவின் கருணை தானே! இது முற்றிலும் உண்மை. தூய ஆரோக்கிய அன்னையின் மீது நம்பிக்கை வைத்தால் அவர் நமக்கு பல நன்மைகளை செய்வார் என்பதில் சிறிதும் ஐய்யமில்லை.