SAINT FRANCIS XAVIER CHURCH

Tuesday 17 March 2015

நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே

நன்றி என்றும் பாடுவேன் என் இனிய தேவனே
நன்மை செயல்கள் செய்த உந்தன் அன்பைப் பாடியே (2)
கோடி நன்றி பாட்டு பாடுவேன்
காலமெல்லாம் வாழ்த்துக் கூறுவேன் (2)

உயிர்கள் யாவும் வாழ நல் உலகைப் படைத்ததால்
உறவு வாழ்வு வளர நல் உள்ளம் உறைந்ததால்
நிஜங்கள் யாவும் நிலைக்க நற்செய்தி தந்ததால்
நிழல்கள் துன்பம் மறைய திருவிருந்தை அளித்ததால்
பகிர்ந்து வாழ்வில் வளர நல்மனதைக் கொடுத்ததால்
பரமன் அன்பில் வாழ அருள் வளங்கள் பொழிந்ததால் (2)

பகிர்ந்து வாழும் அன்பு வாழ்வில் என்னைச் சேர்த்ததால்
ஜெபித்து நின்று வேண்டும்போது என்னைக் காப்பதால்
நேசக் கரத்தை நீட்டி வந்து நன்மை செய்வதால்
துன்ப துயரைப் பனியைப்போல விலக வைப்பதால்
உண்மை அன்பில் உள்ளம் மகிழத் தந்ததால்
உந்தன் ஒளியே உலகில் எந்தன் வழியாய் ஆனதால் (2)

ஆவலுடன் நான் ஆண்டவர்க்காக

ஆவலுடன் நான் ஆண்டவர்க்காக காத்திருந்தேன்
அவரும் என்னைக் கனிவாக கண்ணோக்கினார் (2)

என் குரலுக்கு அவர் செவி கொடுத்தார்
எழுந்திட எனக்கவர் கை கொடுத்தார்
பாறையில் கால்களை ஊன்றச் செய்தார்
பாதையில் துணை வரும் காவலானார்

நாளும் இறை புகழ் இசைத்திடவே
நாவில் வைத்தார் புதுப்பாடல்
கண்டு கலங்கிய அனைவருமே
கடவுளை நம்பி மகிழ்வுற்றார்

உம்மைத் தேடும் அனைவரையும்
அன்பில் வேரூற்றி நிற்கச் செய்யும்
விடுதலை வழங்கும் துணை நீரே
விரைவாய் இறைவா வருவீரே 

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்

படைப்பு எல்லாம் உமக்கே சொந்தம்
நானும் உந்தன் கைவண்ணம்
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே
குயில்கள் பாடும் கிளிகள் பேசும்
என் வாழ்வு இசைக்கும் உன் ராகமே

இயற்கை உனது ஓவியம் இணையில்லாத காவியம் (2)
அகிலம் என்னும் ஆலயம் நானும் அதிலோர் ஆகமம் (2)
உள்ளம் எந்தன் உள்ளம் அது எந்நாளும் உன் இல்லமே (2)

இதயம் என்னும் வீணையில் அன்பை மீட்டும் வேளையில் (2)
வசந்த ராகம் கேட்கவே ஏழை என்னில் வாருமே (2)
தந்தேன் என்னை தந்தேன் என்றும் என்வாழ்வு உன்னோடுதான் (2)

தினந்தோறும் தினந்தோறும் உன்னை நானும் தேடி

தினந்தோறும் தினந்தோறும் உன்னை நானும் தேடி
வருவேன் உன் சந்நிதி - என்றும் நீதான் வாழ்வின் கதி
இப்போதும் எப்போதும் கவி நூறு பாடி
தொழுவேன் உன் சந்நிதி - என்றும் நீதான் வாழ்வின் கதி
ஒரு பார்வை போதும் ஒரு வார்த்தை போதும்
ஒரு தீண்டல் அது போதுமே - என்றும்
என் வாழ்வே உனதாகுமே

வழியெங்கே எனத்தேடி விழி ஏங்கும் போது
நான் தேடும் வழியாகும் உன் சந்நிதி (2)
வரும்கோடி உனைநாடி மனம் தேடும்போது
நான் காணும் கதியாகும் உன் சந்நிதி
நதி கூடும் கடலாக விழிமூடும் இமையாக
கவி பாடும் குயிலாக கனியூட்டும் சுவையாக
வந்த என் சொந்தமே வாழும் உன் பந்தமே - ஒரு பார்வை

சோகங்கள் சுமையாகி நான் வாடும் போது
சுமை தாங்கும் கரமாகும் உன் சந்நிதி (2)
சொந்தங்கள் இனி எங்கே என ஏங்கும்போது
உறவாக எனைச் சேரும் உன் சந்நிதி
பயிர் மூடும் பனியாக உயிர் கூடும் உறவாக
மழை தேடும் நிலமாக மனம் தேடும் மொழியாக
வந்த என் சொந்தமே வாழும் உன் பந்தமே - ஒரு பார்வை

Sunday 15 March 2015

கண்ணில் புதிய வானம்

கண்ணில் புதிய வானம் கையில் புதிய பூமி
செல்வோம் புதிய பாதை இயேசு அழைக்கின்றார் (2)

நீதி மறையும் போது அமைதி இல்லையே (2)
நீங்காப் பகையினாலே வாழ்வில் தொல்லையே
இணைவோம் பகை மறப்போம் இறைவன் உறவிலே (2)

கவலை இனியும் இல்லை காப்பார் இறைவனே
அவரின் அன்பின் அரசில் அனைத்தும் இனிமையே
இணைவோம் அன்பைப் பகிர்வோம் இறைவன் உறவிலே (2)

உறவு மலரும் புனித இடம்

உறவு மலரும் புனித இடம் ஆலயம் ஆலயம்
உள்ளம் ஒன்று சேரும் இடம் ஆலயம் ஆலயம் (2)
உணர்வு பெருகிட உயர்வு அடைந்திட
உண்மை வழி செல்லும் வாழ்வும் ஆலயம்
ஆலயம் ஆலயம் ஆலயம் ஆலயம்

இயற்கை காத்திடும் மாந்தர் வாழிடம் ஆலயம் ஆலயம்
பகிர்ந்து வாழ்ந்திடும் உயிர்கள் உறைவிடம் ஆலயம் ஆலயம்
மனிதத்தை உயிரென மதித்திடும் உள்ளங்கள்
மானுடர் வாழ்வுக்காய் தனைத் தரும் நெஞ்சங்கள்
நம்பிக்கை செய்தி சொல்லும் நண்பர்கள்
உண்மைக்காய் உயிரை இழக்கும் ஜீவன்கள்
எல்லோரும் இறைவன் உறையும் ஆலயம் (2)

பசுமை சோலைகள் பாடும் பறவைகள் ஆலயம் ஆலயம்
காற்றும் வானமும் கடலும் மலைகளும் ஆலயம் ஆலயம்
விடியலின் குரலென ஒலித்திடும் கலைகளும்
கடவுளே உன் புகழ் பாடிடும் கவிதையும்
நல்வார்த்தை பேசுகின்ற நாவுகள்
நல்லோரின் பாதை செல்லும் பாதங்கள்
எல்லாமே இறைவன் உறையும் ஆலயம் (2)

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே

நல்லகாலம் பொறந்திருச்சு நாடும் வீடும் செழிச்சிருச்சு
புனிதர் கோயில் தொறந்திருச்சு நமக்கு புதுவாழ்வு மலர்ந்திருச்சு

பாமாலை பாடிடுவோம் சவேரியாரே - உங்க
பாதம் தொட்டு வணங்கிடுவோம் சவேரியாரே (2)
கொண்டாடி மகிழ்ந்திடுவோம் சவேரியாரே - உமக்கு
கோயில் கட்டி கும்பிடுவோம் சவேரியாரே (2)

இயேசு சாமி வார்த்தைகள பேசி வந்த போதகரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே
இறையரசின் தூதுவரே சவேரியாரே
இஞ்ஞாசியார் கண்டெடுத்த இயேசு சபை மாமுனியே (2)
இறைவன் தந்த அருள் கொடையே சவேரியாரே (2)
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே (2)

தென்னாட்டுப் பகுதியிலே கடலோர ஊர்களிலே
நற்செய்தி போதித்த சவேரியாரே
நற்செய்தி போதித்த சவேரியாரே
நம்பி வந்த எங்களது முன்னோர்கள் யாவருக்கும் (2)
ஞானஸ்நானம் வழங்கிய சவேரியாரே (2)
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே (2)

கட்டுமர ஓடத்திலே கடல்மீது போகையிலே
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே
கிட்டிருந்து காத்திடுமே சவேரியாரே
அலையோடு போராடி வலை வீசும் வேளையிலே (2)
நல்லாசி தந்திடுமே சவேரியாரே (2)
வாழியவே வாழியவே சவேரியாரே - எங்க
விசுவாச நாயகனே சவேரியாரே (2)
 

Blogger news

Blogroll

About